Tuesday, February 27, 2007

இளைய நிலா பொழிகிறதே - பாடல்

இந்த பாடல் வெளி வந்த சமயத்தில் இப்போது உள்ளது போல் பாடல்களை அடிக்கடி கேட்க முடியாது. ஆல் இந்தியா ரேடியோ-வில் மட்டும் தான் நாங்கள் கேட்க முடிந்தது(கேசட் பிளேயர் இருந்தால் கேட்கலாம். எல்லோரிடமும் கேசட் பிளேயர் இல்லாத காலம், நெட்டும் கிடையாது, டவுன்லோடு என்றால் என்னவென்று அறியாத காலம்). ஆனால் தினமும் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும் ஆல் இந்தியா ரேடியோ-வில்.

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. கிடார் வாசித்த கலைஞர் சிரமப் பட்டதால் இளையராஜாவே அந்தக் கலைஞருக்கு இப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வைக் கொடுக்கக் கூடிய பாடல்.

படத்தில் பார்க்கும் போது அவ்வளவாக ரசிக்க முடியாது, காரணம் படத்தில் சிறிது உரையாடல் இருக்கும் (மோகனும் எஸ்.வி.சேகரும் பேசிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்).

இந்தப் பாடலை திரு.வைரமுத்து முதலில் சலவை நிலா பொழிகிறது என்று எழுதியிருந்தார். அந்த வரி சரியில்லை என்று சொல்லியதால் இளைய நிலாவாக மாற்றிவிட்டதாக சமீபத்தில் வந்த பாட்டுக்குப் பாட்டு (சன் டி.வி.) நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னார்.

எஸ்.பி.பி-யின் குரலுக்காகவும் ராஜாவின் இசைக்காகவும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நீங்களும் இன்னொரு முறை இந்த பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள்.


Tuesday, February 20, 2007

இளைய நிலா பொழிகிறதே

இந்த வீடியோ க்ளிப்பைப் பாருங்கள். சமீபத்தில் திரு. எஸ்.பி.பி. அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் (ஜெயா டி.வி.) இருந்து எனக்கு பிடித்த பகுதி.

இளைய நிலா பாடலின் இசையைப் பற்றியும் இளையராஜா இசை அமைத்த விதத்தை பற்றியும் அவருக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்.
இந்தப் பாடலை அவர் ஆயிரம் முறை பாடியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அனுபவித்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே. இந்தப் பாடலை அவர் பாடி பலமுறை இசை நிகழ்ச்சிகளிலும், தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கிறேன். இன்னமும் அனுபவித்து பாடுகிறார்.





பயணங்கள் முடிவதில்லை படம் வெளி வந்த போது கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். பரீட்சை சமயமாதலால் படம் ரிலீசானவுடன் பார்க்க முடியவில்லை. ஆனால் பாடல் ரேடியோவில் கேட்டு இருந்ததால் பரீட்சை முடிந்த அன்று இரவே படம் பார்க்க சென்றது நினைவிருக்கிறது.