Tuesday, February 27, 2007

இளைய நிலா பொழிகிறதே - பாடல்

இந்த பாடல் வெளி வந்த சமயத்தில் இப்போது உள்ளது போல் பாடல்களை அடிக்கடி கேட்க முடியாது. ஆல் இந்தியா ரேடியோ-வில் மட்டும் தான் நாங்கள் கேட்க முடிந்தது(கேசட் பிளேயர் இருந்தால் கேட்கலாம். எல்லோரிடமும் கேசட் பிளேயர் இல்லாத காலம், நெட்டும் கிடையாது, டவுன்லோடு என்றால் என்னவென்று அறியாத காலம்). ஆனால் தினமும் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும் ஆல் இந்தியா ரேடியோ-வில்.

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. கிடார் வாசித்த கலைஞர் சிரமப் பட்டதால் இளையராஜாவே அந்தக் கலைஞருக்கு இப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வைக் கொடுக்கக் கூடிய பாடல்.

படத்தில் பார்க்கும் போது அவ்வளவாக ரசிக்க முடியாது, காரணம் படத்தில் சிறிது உரையாடல் இருக்கும் (மோகனும் எஸ்.வி.சேகரும் பேசிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்).

இந்தப் பாடலை திரு.வைரமுத்து முதலில் சலவை நிலா பொழிகிறது என்று எழுதியிருந்தார். அந்த வரி சரியில்லை என்று சொல்லியதால் இளைய நிலாவாக மாற்றிவிட்டதாக சமீபத்தில் வந்த பாட்டுக்குப் பாட்டு (சன் டி.வி.) நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னார்.

எஸ்.பி.பி-யின் குரலுக்காகவும் ராஜாவின் இசைக்காகவும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நீங்களும் இன்னொரு முறை இந்த பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள்.


1 comment:

உண்மைத்தமிழன் said...

சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!

கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..

அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.

இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!

கவிப்பேரரசுவின் இந்த விட்டுக் கொடுக்காத தன்மை இண்டஸ்ட்ரீ முழுக்கத் தெரிந்ததுதான். இதனால்தானோ என்னவோ அவரை எப்படியாவது கீழேயிறக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேருக்கு இருக்கு போலிருக்கு..! இயக்குநர் அமீர் ஒரு நிகழ்ச்சியில் மதன் கார்க்கியை மேடையில் வைத்துக் கொண்டே, “எப்பவுமே வைரமுத்துதான் உச்சத்துல இருக்காரு.. அவரை யாராச்சும் கீழே இறக்கி விடுவாங்களான்னு நானும் பார்த்துக்கிட்டேயிருக்கேன். யாராலும் முடியலை.. மதன் கார்க்கியாச்சும் அதைச் செஞ்சா நல்லாயிருக்கும்”ன்னாரு.. மதன் கார்க்கியால் சிரிக்க மட்டுமே முடிந்தது..!

அது போகட்டும்.. “சலவை நிலா”வுக்கு என்ன அர்த்தம்..?

Read more: http://www.truetamilan.com/2012/11/05-11-12.html#ixzz2jb6munHe